Tuesday, June 19, 2018

கல்கி நாவல்கள் விமர்சனம்...

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்....
  அமரர் கல்கியின் படைப்புக்கள் பலவற்றை நீங்கள் நிச்சயம் படித்தீருப்பீர்கள்...என்னுடைய பார்வையில் அமரர் கல்கியையும் அவரது காவிய படைப்புக்களையும் பகிரத் துடிக்கிறேன்..
  சோழ வள நாட்டையும், பல்லவ சாம்ராஜ்யத்தையும் அவர் உற்று நோக்கும் போது அவர் மட்டும் பார்க்கவில்லை, நம் கழுத்தை பிடித்து அழுத்தி உற்று நோக்க சொல்லி அழுத்துகிறார்.. அவர் வலுக்கட்டாயமாக வலிமை வாய்ந்த கைகளை கொண்டு கழுத்தை அழுத்தவில்லை, அவரால் காகிதத்தில் எழுதப்பட்ட வார்த்தைகளை கொண்டு நம்மை கழுத்தை திருப்ப விடாமலும், கண்களை மூட விடாமலும் செய்கிறார்.
   பொன்னியின் செல்வனாகட்டும், பார்த்திபன் கனவாகட்டும், சிவகாமியின் சபதமாகட்டும் எதற்குள் நுழைந்தாலும் சரி, உடல் சோர்வை காரணம் காட்டி இந்த அத்தியாயத்துடன் போதும் என்று நினைக்கும் பொழுதுதான் அடுத்த அத்தியாயத்திற்கான சுவாரஸ்யத்தையும் எதிர்பார்ப்பையும் முந்தைய அத்தியாயத்திலேய துவக்கி வைத்து விடுவார்.. இவரால் பல இரவுகள் தூக்கத்தை தொலைத்திருக்கிறேன் நான்...
  கல்கியானவர் ஒரு பத்திரிக்கையாளர் என்றும் நாவல் ஆசிரியர் என்றும் தான் அறிமுகம் செய்து வைத்திருந்தேன் அவரது நாவல்களை படிக்கும் வரை... அவரின் நூல்களை படிக்க ஆரம்பித்த பிறகு தான் தெரிந்தது,அவர் ஆசிரியர் மட்டும் அல்ல நாம் கற்பனையில் செய்ய போகும் பயணத்திற்கு வழிகாட்டியும் அவர்தானென்று..
    எனது முதல் பயணம் பொன்னியின் செல்வன் வாயிலாக அமைந்தது.கல்கி என் கைகளை பிடித்து அழைத்து சென்றார்..பல இடங்களை சுற்றி பார்க்கிறோம். இன்று காய்ந்து வறண்டு போன காவிரி,அன்று எப்படி இருக்கிறது தெரியுமா..? ஆயிரம் கைகளை கொண்டு நிலமகளை தழுவி பெரும் பிரவாகமாய் ஓடுகிறது..நிலமகள் அணிந்திருக்கும் பச்சை நிற பட்டு புடவை எவ்வளவு அழகாய் இருக்கிறது..இன்றோ அனைத்தும் கட்டிடங்களாக அல்லவா காட்சியளிக்கிறது..மாட மாளிகைகள் நிறைந்த தலைநகரமான உறையூர்..போர் நடக்கும் இலங்கை..இப்படி பல இடங்களை சுற்றி பார்க்கிறோம்...
  மேலும் எத்தனை வகையான மனிதர்களை அறிமுகம் செய்து வைத்தார்... வாலிபன் வந்தியத்தேவன், அதிமேதாவி ஆழ்வார்க்கடியான்,நஞ்சு மலர் நந்தினி, குலவிளக்கு குந்தவை தேவியார், அற்ப ஆயுள் பெற்ற ஆதித்த கரிகாலன், சுகவீனமடைந்த சுந்தர சோழர்,ராஜர்க்கு ராஜனான ராஜராஜன், வேடிக்கையான வானதி, புத்திசாலி பூங்குழலி, உண்மை தெரியாத உத்தம சோழன்( எ)சேந்தன் அமுதன், படைத் தளபதிகள் பழுவேட்டரையர்கள் இன்னும் பலர்... ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான குணங்களை கொண்டிருந்தார்கள்..அங்கு நடந்த ஒவ்வொரு சம்பவங்களும் சுவாரசியமாகவும், பல திருப்புமுனைகளையும் கொண்டிருந்தன.சோழ நாட்டில் இன்னும் பல விசேசங்கள் நடந்தன.ஆனால் அவற்றை எல்லாம் பகிர்ந்தால் ஒருவேளை நமது வாசகர்களுக்கு அலுப்பு ஏற்படலாம்.எனவே இங்கு நிறுத்தி கொண்டு கல்கியிடம் கேட்டேன்.சோழ சக்ரவர்த்தி போல் வேறு சக்ரவர்த்தி பற்றி கூறுங்கள் என்றேன்..சரி பல்லவ சாம்ராஜ்யத்தின் சக்ரவர்த்தி நரசிம்ம பல்லவரைப் பற்றி அறிவோம் என்றபடி "பார்த்திபன் கனவு"என்ற வாயிலுக்குள் அழைத்தார்..உள்ளே நுழைந்தால் பல்லவ சாம்ராஜ்யம் பரந்து விரிந்து கிடக்கிறது,சோழ அரசோ பல்லவ சாம்ராஜ்யத்திற்கு கப்பம் கட்டும் சிற்றரசாக இருக்கிறது..."ஆசிரியரே என்ன இது சோழ சாம்ராஜ்யம் ஏன் இப்படி குறுகிக் கிடக்கிறது" என்றேன் நான்... "அவசரப்படாதேயப்பா... இன்று குறுகி போய் இருக்கும் இந்த சோழ சிற்றரசு வருங்காலத்தில் ராஜ ராஜனால் மிகப் பெரிய சாம்ராஜ்யமாக உருவெடுக்கப் போகிறது" என்றார்...ஆமாம்  ஆமாம் பல்லவ சக்கரவர்த்தி காலத்திற்க்கு பிறகு தானே ராஜராஜனின் காலம் என்று ஞாபகம் செய்து கொண்டேன்..
   பல்லவ சக்கரவர்த்தி மாமல்லர் நரசிம்ம பல்லவரோ பெரும் வீரராகவும், எதிர் காலத்தில் நடக்கவுள்ள இடர்களை நிகழ்காலத்திலேயே களையக்கூடிய அதி புத்திசாலியாக இருக்கிறார்.. இந்த கதையில் பரம எதிரிகளாக வரும் நரசிம்ம பல்லவரும் நல்லவர் பார்த்திப சோழரும் நல்லவர்.. பார்த்திப சோழனின் கனவை நிறைவேற்ற விக்கிரம சோழன் எத்தனை இடர்களை கடக்கிறான் கபாலிகர்களின் நரபலி, காட்டாற்று வெள்ளம், விச ஜூரம் அப்பப்பா..!. இங்கேயும் பல மாந்தர்களை கண்டேன் பல்லவ சக்ரவர்த்தி நரசிம்ம பல்லவர், இளைய பல்லவர் மகேந்திரன், பல்லவ இளவரசி குந்தவை,  சிவனடியார், ஓடக்கார பொன்னன், வள்ளி, சிறுத்தொண்டர், நாவுக்கரசர் இன்னும் எவ்வளவோ நபர்கள்...ஒவ்வொருவரும் என்னை மெய் சிலிர்க்க செய்தார்கள்..."என்னப்பா..! பல்லவ சாம்ராஜ்யத்தையும்,சோழ சாம்ராஜ்யத்தையும் சுற்றி பார்த்து விட்டாய் இனி நான் விடை பெற்று கொள்ளட்டுமா?"என்று கேட்டார் கல்கி.அவருக்கு விடை கொடுக்க மனமில்லை..ஏதோ ஒன்று உறுத்தியது.. ஆஹா..! நினைவு வந்து விட்டது.."ஆசிரியரே..! நாம் ஆயனர் வீட்டை சுற்றி பார்த்தபோது ஒரு சமயம் சிவகாமி என்பவரை பற்றி பேசிக் கொண்டிருந்த போது சக்ரவர்த்தி கண்கள் தானாக கண்ணீரை சுரந்ததே ஏன்...?"என்று கேட்டேன்."அதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் நாம் வட நாட்டு பிராயணம் செய்ய வேண்டும், அதில் உனக்கு உடன்பாடு உண்டா?" என்றார்.."ஆசிரியரே என்ன இப்படி கேட்டு விட்டீர்கள்...?, கரும்பு தின்ன கசக்குமா என்ன..? தங்களுடன் பயணம் செய்வதென்றால் ஆகாயத்துக்கு அப்பால் கூட வருவேன் நான்"என்றேன்.."சரி வா.!"என்றபடி கைகளை பிடித்து கொண்டு சிவகாமியின் சபதம் வாயிலுக்குள் இழுத்து சென்றார்..
அங்கே பார்த்தால் அதே பல்லவ சாம்ராஜ்யம் ஆனால் அங்கே நரசிம்ம பல்லவர் சிறு பிராயத்தவராக இருக்கிறார்..அப்பொழுது பல்லவ சாம்ராஜ்யத்தை ஆண்டு கொண்டிருப்பவர் நரசிம்ம சக்ரவர்த்தியின் தந்தை முதலாம் மகேந்திர பல்லவர், அவரை பார்க்கும் போது தான் புரிகிறது நரசிம்ம பல்லவரின் சாதுரியங்களும் சாகசங்களும் அவரிடமிருந்து தான் வந்திருக்கிறது என்று...
இங்கேயும் நான் பல மனிதர்களை சந்தித்தேன்.. கதாநாயகி சிவகாமி, ஆயனச்சிற்பி,பரஞ்சோதி, வாதாபி சக்ரவர்த்தி புலிகேசி,நீலகேசி, புத்தபிட்சு,குண்டோதரன், கண்ணபிரான்,கமலி,ரதி,சுகப்பிரம்மரிஷி, வானமா தேவி இன்னும் பலரை அறிமுகம் செய்து வைத்தார்...எவ்வளவு நேரம் அவருடன் பயணம் செய்தோனோ தெரியவில்லை ஆனாலும் சிறு அலுப்பு கூட ஏற்படவில்லை.. வாசகர்களில் பலர் அமரர் கல்கியுடன் பயணம் செய்து இருக்கலாம் அந்த அனுபவத்தை நீங்கள் இங்கே பகிருங்கள்..இதுவரை பயணம் செய்யாதவர்கள் ஒருமுறை செய்து பாருங்கள்..பல வருடங்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்..கல்கி உங்களை உறுதியாக அழைத்து செல்வார்..பிரமிக்க வைக்கும் இடங்களை சுற்றி காண்பிப்பார்..ஆயினும் கவனமாக பயணம் செய்யுங்கள் திடீரென்று கடலிலும், காவிரி ஆற்றிலும தள்ளி விட்டு விடுவார்.. கபாலிகர்களிடம் மாட்டி விடுவார்..பாற்கடலை உடைத்து விடுவார்..மதயானையை கட்டவிழ்த்து விடுவார் ஆயினும் அபயமில்லாமல் அவரே காப்பாற்றி விடுவார்...அவரிடம் ஆசிர்வாதமும் விடையும் பெற்று நிகழ் காலத்திற்கு திரும்பினேன்...நீங்களும் ஒருமுறை அவருடன் பயணம் செய்யுங்கள்...
            நன்றி மற்றும் வணக்கத்துடன்
                                  தர்மா.......



Sunday, April 1, 2018

மனதை கவரும் காதல் கவிதை

முற்றத்தில் வந்த நிலா
முத்தத்தால் எனை முட்டாதோ
வெட்கத்தால் கன்னம் சிவந்தாலும்
பக்கத்தில் வந்திராதோ காதல்
ஏக்கத்தால் மனம் தள்ளாட விழி
பார்க்கத்தான் உன் முகம் வாராதோ
மக்கிப் போகும் முன் என்னைத்தான்
என் அத்தான் என்றழைக்கும் எண்ணித்தான் இருக்கிறேன் நானே..

கல்கி நாவல்கள் விமர்சனம்...

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்....   அமரர் கல்கியின் படைப்புக்கள் பலவற்றை நீங்கள் நிச்சயம் படித்தீருப்பீர்கள்...என்னுடைய பார்வையில் அமரர் ...